மேம்பட்ட வளர்கரு பராமரிப்பை வழங்க பிரத்யேக துறையைத் தொடங்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை

மதுரை, ஜனவரி 19, 2019: இமேஜிங் மற்றும் மரபணு பரிசோதனையில் நவீன தொழில்நுட்பங்களையும் மற்றும் சாதனங்களையும் பயன்படுத்தி கருவுற்ற பெண்களிடம் வளரும் கருக்களுக்கு முழுமையான மருத்துவ கவனிப்பை வழங்குவதற்கு வளர்கரு மருத்துவத்திற்கான ஒரு புதிய துறையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மதுரை, இன்று தொடங்கியிருக்கிறது. இத்துறையானது, கருத்தரித்த பெண்களுக்கும் மற்றும் தாய்மார்களுக்கும் இது தொடர்பான சிகிச்சை கவனிப்பையும், ஆலோசனையையும் வழங்கும். 

வளர்கரு பராமரிப்பில் பயிற்சி பெற்ற மகப்பேறு மருத்துவர்கள், கதிரியக்க சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மரபணு மருத்துவர்களால் நிர்வகிக்கப்படும், வளர்கரு மருத்துவ துறையானது, குழந்தைக்கான கருவளர்ச்சி மற்றும் அதன் நலம் குறித்த மதிப்பீட்டை வழங்குவதற்கு அவசியமான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது.  அத்துடன், வளர்கருவில் இருக்கின்ற நோய் பாதிப்பு நிலைகளையும், இயல்புக்கு மாறான பிறழ்வுகளையும் கண்டறியவும்  மற்றும் அவைகளுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் தேவைப்படும் சாதனங்கள் மற்றும் நிபுணத்துவத்தை இத்துறை கொண்டிருக்கிறது. 

தொடங்கப்பட்டுள்ள இப்புதிய துறை குறித்து கருத்து தெரிவித்த மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர், “இந்தியாவில் பிறப்பின்போது ஏற்படும் குறைபாடுகளின் அளவானது 6-7 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, 1.7 மில்லியன் குழந்தைகள் பிறக்கும்போதே குறைபாடுகளுடன் பிறக்கின்றனர்.  இந்த பொதுவான பிறப்பு குறைபாடுகளுள் பிறவி இதய நோய், பிறவி காது கேளாமை மற்றும் நரம்புக் குழாய் குறைபாடுகள் ஆகியவையும் உள்ளடங்கும்.  பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளிடம் காணப்படுகின்ற பிறவி கோளாறுகளைப் பொறுத்தவரை எண்ணிக்கை அளவில், உலகளவில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது.

நெருங்கிய இரத்த உறவினர்களுடன் திருமணங்கள் (இரத்த உறவு திருமணங்கள் என அழைக்கப்படுபவை), பிறப்பில் ஏற்படும் பிறவிக் கோளாறுகளோடு நெருக்கமான பிணைப்புள்ளவையாக இருக்கின்றன.  வடஇந்தியாவில் நெருங்கிய இரத்த உறவுகளுக்கு இடையில் நடத்தும் திருமணங்களின் விகிதாச்சாரம் 1 முதல் 4 சதவிகிதம் வரை குறைவானதாகவே இருக்கும் நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் இது 20-30 சதவிகிதம் என மிக அதிக அளவில் இருக்கிறது.  இத்தகைய திருமண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள், பல மரபணு கோளாறுகள் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பிறவியிலேயே குறைபாடுகள் உள்ளவையாக இருப்பதற்கு மிக அதிக இடர்வாய்ப்பு இருக்கிறது.  இத்தகைய தாய்மார்கள், குறிப்பிட்ட மரபணு பிறழ்வு சோதனைகளை செய்துகொள்வது முக்கியமாகும். 

மருந்துகள் தொடர்புடைய பிற காரணிகளும் இருக்கின்றன.  நீரிழிவு, தன் எதிர்ப்பு நோய்கள் போன்ற மருத்துவ பிரச்சனைகளுக்காக கருத்தரித்த தாய்மார்களால் வழக்கமாக உட்கொள்ளப்படும் மருந்துகள் மற்றும் வலிப்புநோய் ஆகியவையும், வளர்கருவில் கோளாறுகள், இயல்பு பிறழ்வுகள் ஏற்படுமாறு பாதிக்கக்கூடும்.

அத்துடன், ஒன்றுக்கும் மேற்பட்ட கருத்தரித்தல் நிலை அதிகரித்து வருவதும், சவாலை தீவிரமாக்குகிறது.  இன்றைக்கு அதிக எண்ணிக்கையிலான தம்பதியர், உதவப்படும் இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART) சார்ந்த கருத்தரிப்பு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். மூன்று குழந்தைகள் மற்றும் நான்கு குழந்தைகள் கருவில் வளர்வதற்கான வாய்ப்பை ART சிகிச்சை அதிகரிக்கக்கூடும்.  ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கருவில் வளரும் நேர்வு, கருத்தரிப்பு கலைவதற்கான மிக அதிக வாய்ப்பினை கொண்டிருக்கிறது.  சிறப்பான கருத்தரிப்பு விளைவைப் பெறுவதற்கு, நல்ல சாதனங்களுடன் நிபுணத்துவ மருத்துவர்கள் கொண்ட உயர்வான மூன்றாம்நிலை சிகிச்சை மையங்கள் முக்கியமானவை. 

குழந்தைகள் ஆரோக்கியமான வளரவிடாமல் தடுப்பதற்கு உள்ளார்ந்த மரபணு காரணங்களும் இதில் பங்காற்றுகின்றன.  இமேஜிங் மற்றும் மரபணு சோதனையில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக குழந்தை கருவில் வளரும்போதே இத்தகைய உடல்நலப் பிரச்சனைகளை கண்டறிவதும் மற்றும் அவைகளுக்கு சிகிச்சையளிப்பதும் சாத்தியமாகியிருக்கிறது,” என்று கூறினார். 

இப்புதிய மையத்தில் கிடைக்கக்கூடிய சிகிச்சைகள் மற்றும் உடல்நல பராமரிப்பு சேவைகள் குறித்து பேசிய, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மகப்பேறு மற்றும் வளர்கரு மருத்துவ துறையின் தலைவர் டாக்டர். எஸ். பத்மா, “உயர்ஆபத்துள்ள கருத்தரிப்பு நேர்வுகளில் முழுமையான சிகிச்சை கவனிப்பை வழங்குவதும் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிரசிகிச்சையை வழங்குவதும் இத்துறையின் முதன்மையான நோக்கமாகும். 

இண்டெர்வென்ஷனல்  ரேடியோலஜி துறையின் தலைமை மருத்துவர் டாக்டர்.                        டி .முகுந்தராஜன் அவர்கள் கூறுகையில், எமது பணியில், நோய் பாதிப்புகளை அறிவதற்கான ஸ்கிரீனிங் செயல்பாடும் மற்றும் இமேஜிங் நடவடிக்கையும் மிக இன்றியமையா பங்காற்றுகின்றன.  டவுன்ஸ் சின்ட்ரோம், இரத்த அழிவுச்சோகை, முதுகெலும்பு தசைநார் சிதைவு போன்ற நோய்களை அடையாளம் காண்பதற்கு பிறப்பிற்குப் பிந்தைய நவீன ஸ்க்ரீனிங் சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.  உடலமைப்பு சார்ந்த குறைபாடுகள், நரம்பியல் கோளாறுகள் மற்றும் இதயம் சார்ந்த குறைபாடுகளை கண்டறிவதற்கு அல்ட்ராசவுண்டு அடிப்படையிலான இமேஜிங் உத்தியான உயர்திறன் மிக்க அல்ட்ராசோனோகிராஃபியை நாங்கள் பயன்படுத்துகிறோம்.  அதிக இடர்வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள வளர் கருக்களுக்கு சிறப்பு பரிசோதனைகள் மற்றும் கவனிப்பை நாங்கள் மேற்கொள்கிறோம்.  மரபணு கோளாறுகள் மற்றும் இயல்பு பிறழ்வுகளுக்கு சாத்தியத்திறன் கொண்ட வளர் கருக்களை சுமக்கும் தாய்மார்களுக்கு திறன்மிக்க ஆலோசனையையும் நாங்கள் தருகிறோம். கிடைக்கக்கூடிய மருத்துவ விருப்பத்தேர்வுகள் மீது தகவலறிந்த முறையில் முடிவுகளை எடுக்கவும் மற்றும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவும் தாய்மார்களுக்கு இது உதவுகிறது,” என்று கூறினார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், கருப்பையகத்தில் இரத்தமேற்றல் செயல்பாட்டை வெற்றிகரமாக சமீபத்தில் நிகழ்த்திக்காட்டியிருந்தது. இதன்மூலம் இரத்தசோகை பாதிப்புள்ள வளர்கருக்களுக்கு வாழ்க்கையில் புதிய வாய்ப்பை தந்திருக்கிறது. 

இத்துறையின் தொடக்கவிழா நிகழ்வைத் தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம், மதுரை கிளையின் ஒத்துழைப்போடு வளர்கரு மருத்துவம் மீது தொடர் மருத்துவ கல்வி (CME) என்பதற்கான ஒருநாள் திட்டத்தையும் இம்மருத்துவமனை நடத்தியது. 

இந்த தொடர் மருத்துவக்கல்வி திட்டத்தில் தென்தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 100 மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.  இருஅமர்வுகளைக் கொண்ட இந்நிகழ்வில், முதல் அமர்வானது, முதல் மூன்றுமாதங்களை உள்ளடக்கிய கர்ப்ப பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தியது.  மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஓய்வுபெற்ற மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியியல் பேராசிரியர் புரொஃபசர் டாக்டர். பி. மீனாம்பாள் மற்றும் மதுரையைச் சேர்ந்த டாக்டர். ஹார்லே ஆர். ராம், மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியல் துறையின் முதுநிலை சிறப்பு மருத்துவர் டாக்டர் சாவித்ரி ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். 

முதலாவது மூன்று மாத கால ஸ்கிரீனிங் செயல்பாடு மீது இரண்டாவது அமர்வு கூர்நோக்கம் செலுத்தியது.  மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையின் ரேடியாலஜி துறையின் தலைவர் புரொஃபசர் டாக்டர். எஸ். சுமதி மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் ரேடியாலஜி துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். என். கருணாகரன் ஆகியோர் இந்த அமர்வுக்கு தலைமை வகித்தனர்.

பிரபல மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் கீழ்க்கண்ட தலைப்புகள் மீது உரையாற்றினர்: மற்றும் சோனோஎம்ப்ரியாலஜி, கருக்குழாயில் கர்ப்பத்தின் மருத்துவ மேலாண்மை, கருக்குழாய் கர்ப்பத்தின் அறுவை சிகிச்சை மேலாண்மை, வடு கருக்குழாய் கர்ப்பம், முதல் மூன்று மாத முரண்பாடுகள், முதல் மூன்று மாத முரண்பாடுகளின் மரபியல் மற்றும் முதல் மூன்று மாத காலத்தில் துளைத்தல் சிகிச்சை நுட்பங்கள்.