Home SPORTS மகாராஷ்டிரா, பெங்களூர் அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி

மகாராஷ்டிரா, பெங்களூர் அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி

0
SHARE

சென்னையில் நடைபெற்றுவரும் சீனியர் தேசிய ஹாக்கி போட்டியில் மகாராஷ்டிரா(ஏ பிரிவு), சசாஷ்த்ரா சீமா பல்(பி பிரிவு), மத்திய தலைமைசெயலகம்(சி பிரிவு), பெங்களூரு(டி பிரிவு) ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

ஏ பிரிவைச் சேர்ந்த மகாராஷ்டிரா, மத்திய பிரதேச அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணி 2க்கு1 என்ற கோல்களில் வெற்றி பெற்று 4வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 12 புள்ளிகள் குவித்து இப்பிரிவில் முதலிடம் பெற்று காலிறுதிக்கு நுழைந்தது.

பி பிரிவைச் சேர்ந்த சசாஷ்த்ரா சீமா பல் (எல்லை பாதுகாப்பு படை அணி) 3க்கு2 என்ற கோல்களில் ஜம்மு காஷ்மீர் அணியை தோற்கடித்து 3 வது வெற்றி பெற்றது. ஒரு ஆட்டத்தில் டிரா கண்டதன் மூலம் மொத்தம் 10 புள்ளிகள் பெற்று இப்பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு நுழைந்தது.

சி பிரிவில் மத்திய தலைமை செயலக அணி 12க்கு0 என மிசோரத்தை வென்றது. 4 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டதன் மூலம் மத்திய தலைமை செயலக அணி 12 புள்ளிகள் பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

டி பிரிவில் பெங்களூரு அணி 8க்கு2 என்ற கோல்களில் ஆந்திராவை தோற்கடித்து 3வது வெற்றி பெற்றது. ஏற்கனவே ஒரு டிரா செய்திருந்த இந்த அணி 10 புள்ளிகள் பெற்று சத்தீஸ்கர் அணியுடன்(3 வெற்றி 1 டிரா) சமநிலை பெற்றது. கோல்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி (27 கோல்கள்) காலிறுதிக்கு தகுதி பெற்றது. சத்தீஸ்கர் 18 கோல்களில் இருந்ததால் காலிறுதி வாய்ப்பை இழந்தது.

ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி இன்று தனது 3வது லீக் வாய்ப்பில் புதுச்சேரி அணியுடன் மோதுகிறது. 2 அணிகளும் தலா 2 வெற்றி கண்டுள்ள நிலையில் இந்த ஆட்டம் மாலை 4.30 மணிக்கு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here