Home SPORTS 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் சாம்பியன்

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் சாம்பியன்

0
SHARE

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற அரைஸ் ஸ்டீல் 9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் போட்டியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழக அணி 4க்கு3 என்ற கோல்களில் மத்திய தலைமை செயலக அணியை தோற்கடித்து  சாம்பியன் பட்டத்தை 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் வென்றுள்ளது.

மொத்தம் 41 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் நடந்தது. இதில் ஜி பிரிவிலிருந்து அரையிறுதி வரை முன்னேறிய தமிழக அணி, அதில் சாய் அணியுடன் மோதியது. இதில், ஷூ¢ட் அவுட்டில் தமிழக அணி 3க்கு 2 எனவும் மொத்தத்தில் 6க்கு5 எனவும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெங்களூர் அணியும், மத்திய தலைமை செயலக அணியும் மோதின. இந்த ஆட்டமும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3க்கு3 என சமநிலையில் முடிந்தது. எனவே, வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் மத்திய தலைமை செயலக அணி 4க்கு3 என்ற கோல்களிலும் மொத்தத்தில் 7க்கு6 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் தமிழக அணியும், மத்திய தலைமை செயலக அணியும் மோதின. ஆட்டத்தின் துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் துடிப்புடன் ஆடினர். ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் தமிழக அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் முத்துசெல்வன் கோலடித்து 1க்கு0 என உயர்த்தினார். 20வது நிமிடத்தில் மத்திய தலைமை செயலக அணி வீரர் கோவிந்த் சிங் ராவத் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோலடித்து 1க்கு1 என சமன்பெறச்செய்தார்.

இதற்கு அடுத்த நிமிடத்திலேயே தமிழக அணி வீரர் ராயர் வினோத் பீல்டு கோல் அடித்து 2க்கு1 என முன்னணி பெறச்செய்தார். இதே நிலையில் முதல்பாதி ஆட்டம் முடிந்தது. 34வது நிமிடத்தில் மத்திய தலைமை செயலக அணி வீரர் கோவிந்த் சிங் ராவத் பெனால்டி கார்னர் மூலம் தனது 2வது கோலை திணித்தார். இதனால் மீண்டும் 2க்கு2 என சமன் ஆனது.

இதற்கு அடுத்த 4 நிமிடங்களில் தமிழக வீரர் தாமு ஒரு பீல்டுகோல் அடித்து மீண்டும் 3க்கு3 என சமன்பெறச்செய்தார். 

இதன்பிறகு ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. இரு அணி வீரர்களும் மேற்கொண்டு கோலடிக்க முயற்சித்ததில் ஆங்காங்கே தள்ளுமுள்ளு நிகழ்ந்தது. இதில் ஒருமுறை தமிழக அணிக்கு 56வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு கிடைத்தது. அப்போது வினோதன் கோலடித்து தமிழகத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

கடைசி 3 நிமிடத்தில் மத்திய தலைமை செயலக அணி கோலடித்து சமன் செய்து பிறகு முன்னணி பெற கடுமையாக போராடின. இதற்காக தங்கள் அணியின் கோல்கீப்பரை அழைத்துக்கொண்டு மற்றொரு வீரரை ஆடுகளத்தில் இறக்கியது. 3 நிமிடங்கள் இந்த அணி கோல்கீப்பரே இல்லாமல் 11 வீரர்களுடன் விளையாடி கோலடிக்க முயற்சித்தும் எடுபடவில்லை. 

முடிவில் தமிழக அணி 4க்கு3 என்ற கோல்களில் மத்திய தலைமை செயலக அணியை வீழ்த்தி 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. போட்டிகளின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் தீரஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் பெர்ணான்டோ தலைமை தாங்கினார். விழாவின் துவக்கத்தில் தமிழ்நாடு மாநில ஹாக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன் வரவேற்றார். முடிவில் செயலாளர் ரேணுகாலட்சுமி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here