Home News ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக அளித்த விளக்கம் .

ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக அளித்த விளக்கம் .

0
SHARE

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி கே . பழனிசாமி அவர்கள் இன்று ( 12 . 2 . 2019 ) சட்டப்பேரவையில் , ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக அளித்த விளக்கம் . 
1892 – ஆம் ஆண்டைய மதராஸ் – மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி , பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும் . இந்த ஒப்பந்தத்தின்படி , மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப் பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல் , எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும் , நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது . சித்தூர் மாவட்டத்தில் , குப்பம் எனும் பகுதியில் , பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரா அரசு கட்ட உள்ளதாக மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் , செய்தி தாள்களில் 4 . 1 . 2006 அன்று தகவல்கள் வெளிவந்தபோது , 5 . 1 . 2006 அன்றே , மாண்புமிகு அம்மா அவர்கள் 1892ம் ஆண்டைய ஒப்பந்தத்தை சுட்டி காட்டி , ஆந்திர அரசு அணைகட்டும் பணியினை மேற்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொண்டார்கள் . மேலும் , மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது . ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் வராதநிலையில் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆணையின்படி , தமிழ்நாடு அரசு 10 . 2 . 2006 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது . இவ்வாறு வழக்கு தாக்கல் செய்ததன்பேரில் , அணைக்கட்டும் பணிகள் தடுக்கப்பட்டன . இந்த வழக்கில் , தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு சாட்சியாளர்களின் குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து , உச்சநீதிமன்றத்தால் இவ்வழக்கு ஜூலை 2019ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்பதை தங்கள் வாயிலாக பேரவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன் .
ஆந்திர அரசு , பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள தடுப்பணையின் உயரத்தை தன்னிச்சையாக உயர்த்தியுள்ளதாக செய்தி வந்தவுடன் , மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் 1 .7 .2016 அன்று உடனடியாக மாண்புமிகு ஆந்திர முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆந்திர அரசின் இத்தகைய செயல் 1892ம் ஆண்டைய ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் எனவும் , உயர்த்தப்பட்ட தடுப்பணையின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும் , கூடுதலாக நீரை தேக்கி வைக்காமல் இருக்கவும் , மற்றும் இயற்கையாக தமிழ்நாட்டிற்குள் வரக்கூடிய நீரை உறுதிப்படுத்தவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கவும் கேட்டுகொண்டார்கள் .இதுகுறித்து மத்திய அரசுக்கும் ஆந்திர அரசுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன .ஆந்திர அரசு , 1892ம் ஆண்டைய ஒப்பந்தத்தை மீறும் வகையிலும் , தமிழ்நாட்டின் முன் அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக பாலாறு மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தியும் , புதியதாக தடுப்பணைகள் கட்டியதும் ஒப்பந்தத்திற்கு முரணானது எனவும் , அவைகளை முன்பிருந்த நிலைக்கே கொண்டுவரவேண்டும் எனவும் போன்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று , தமிழ்நாடு அரசு 18 .7 .2016 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது .மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் 7 .5 .2018 அன்று பாலாறு பிரச்சனை குறித்து ஆந்திரா , கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் சட்டம் .நடத்தியது .இக்கூட்டத்தில் , தமிழ்நாட்டின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது .பாலாற்றின் குறுக்கே சம்மந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவு பெறாமல் புதிய தடுப்பணைகளை கட்டுவதற்கு முனையக்கூடாது எனவும் , இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை மேலும் உயர்த்தக்கூடாது எனவும் , மத்திய நீர் வள் ஆதார துறை செயலாளர் இக்கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார் .மேலும் ,

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் , எனவும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார் . இதற்கிடையில் , ஆந்திர அரசு , பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்பிற்காக 41 . 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதாக செய்தித் தாள்களில் தகவல்கள் வெளியானது . இதைத் தொடர்ந்து , தமிழ்நாடு அரசு 13 . 11 . 2018 அன்று ஆந்திர அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் , தடுப்பணைகளுக்கான விவரங்களை தமிழ்நாட்டின் பரிசீலனைக்காக அளிக்கக் வேண்டியும் மற்றும் தமிழ்நாடு அரசு அதன் கருத்துக்களை அளிக்கும் வரையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்பட்டது . மேலும் , மத்திய அரசினையும் , இதுகுறித்து ஆந்திர அரசுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் ! கேட்டுக்கொள்ளப்பட்டது . ஆந்திர அரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ பதில் ஏதும் வரப்பெறாத நிலையில் , பாலாற்றின் குறுக்கேயுள்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி , உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஒரு மனு ஒன்றை 19 . 11 . 2018 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது . ஆந்திர அரசு , பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட உத்தேசித்திருப்பதாக 5 . 2 . 2019 அன்று செய்தி வந்ததையடுத்து , இத்தடுப்பணைகள் கட்டுவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது எனவும் , உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தடுப்பணைகள் கட்டப்படக்கூடாது எனவும் , அவ்வரசின் நீர்வள ஆதாரத் துறைக்கு அறிவுரை வழங்குமாறு 6 . 2 . 2019 அன்று ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .
பாலாறு நதிநீர் பிரச்சனையில் , மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் இந்த அரசு மிக உன்னிப்புடனும் , கவனத்துடனும் , சட்டரீதியாகவும் , பிரச்சனையை தொடர்ந்து அணுகி வருகிறது என்றும் , தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ) என்பதையும் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் .

ReplyReply allForward

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here