இளம் பெண்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் பேக்கிடெர்ம்டேல்ஸ்

செய்திகள்

கானங்கள் காதை அடையும்வரை அவற்றின் இனிமை உணரப்படுவதில்லை. ஏன், அவை கானங்களாகவே ஆவதில்லை, அல்லவா? எல்லோருள்ளும் சொல்வதற்குக் கதையுண்டு, பகிர்வதற்குக் கருத்து உண்டு. என்றாலும் அவை பதிப்பிக்கக்கப்பட்டு மக்களை அடைந்தாலே, சமூகமும் பயன்பெறும், எழுத்தாளரும் பயனடைவார்.

இந்த எண்ணத்தினை உள்நிறுத்தியே பேக்கிடெர்ம் டேல்ஸ் என்ற பதிப்பக உதவி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உயர்ந்த கருத்துகள் நினைவாக மட்டும் நின்றுவிடாமல், நினைவு எழுத்தாகி, எழுத்து நூலாகி, நூல் பிறர் நினைவில் குடியேறும்வரை பொறுப்பேற்றுக் கொள்ளும் இவர்கள், பலவகைப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்தை வரவேற்றாலும், குறிப்பாக, பெண்கள், மூன்றாம் பாலினர் ஆகியோரின் குரல்கள் சமூகத்தை எட்டவேண்டும் என்பதை லட்சியமாகவே கொண்டுள்ளனர். அதுவும் இளைஞர்களை எழுதவைப்பதன் மூலம் சமூகத்தின் பிரச்சனைகளுக்குப் புதியதும் வேகமும் நேர்மையுமான தீர்வுகள் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

என்றாலும் பெண்களுக்கு அதிகம் கடமைகளும் பொறுப்புகளும் இருக்கிறது. அவர்கள் வீட்டைப் பாலிப்பதைத் தவிர, தற்போது கல்வி கற்கவேண்டிய, வேலைக்குச் செல்லவேண்டிய பொறுப்புகளும் இருப்பதால், பலவிதமான அழுத்தங்களுக்கு இடையில் அவர்களை எழுத வைக்க, அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காகப் புதுத் திட்டமொன்றை அறிவிக்கிறது பேக்கிடேர்ம் டேல்ஸ்.

பேக்கிடெர்ம் டேல்ஸ் தனது மூன்றாவது ஆண்டுவிழாவை அபு சரோவர் போர்டிகோவில் கொண்டாடியது. இதில் பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் அவர்களின் எழுத்து பணியில் உதவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

பேக்கிடெர்ம் நிறுவனர் முனைவர் செல்வி லட்சுமி ப்ரியாவின் கனவுத் திட்டம் இது. படித்துக் கொண்டிருக்கும் இளம் பெண்களுக்கு வருமானம் இருக்காது. அவர்களுக்குள் இருக்கும் எழுத்துத் திறமையை வெளிக் கொணரும் ஊக்கமாகப் பணம் மிகவும் அவசியம் . அப்போது அவர்கள் நிம்மதியாக எழுதுவர் . அவர்கள் எழுதவும், அதைச் செப்பனிடவும், அவர்களுக்கு எழுத்து நுணுக்கங்களைக் கற்றுத் தந்து அதை நூல்வடிவில் கொண்டுவரவும் பேக்கிடெர்ம் டேல்ஸ் அவர்களை வழிநடத்தும். அந்த நூல்களை மக்களிடையே கொண்டுசேர்க்கவும் உதவும்.

பசித்த ஒருவனுக்கு மீன் தருவதைவிட மீன்பிடிக்க கற்று தருவதே நிரந்தரமானது. இளம் படைப்பாளிகள் இந்த நாட்டிற்குத் தேவை. தன்னம்பிக்கையையும், பொருளாதார சுதந்திரத்தையும் பெண்களுக்கு இந்தத் திட்டம் கண்டிப்பாக தரும். கூர்மதியும், நேர்மை வழியும், எழுத்துத் திறனும் கொண்ட இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்கள் எழுத ஊக்கத் தொகை அளித்து, அனுபவமிக்க எழுத்தாளர்கள் மூலம் அவர்களுடைய எழுத்தைச் சீர்திருத்தி, புதுப்புது நூல்களைப் படைக்குமாறு செய்வதே இந்தத் திட்டம். எனவே இதில் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அவர்கள் இதில் எழுத்தை அல்ல, எழுத்தாளர்களையே உருவாக்குகிறார்கள்! சமூகத்திற்குப் படிப்பினையை மட்டுமல்ல, புதிய ஆசிரியர்களை அளிக்கிறார்கள்.

இத்திட்டம் வெற்றியடைந்து, பல புதிய எழுத்தாளர்களும் நூல்களும் பிறந்து, இந்தத் தேசமெங்கும் அறிவுச்சுடர் வீசுக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *