உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் தமிழக வீராங்கனை அனுபமா வெள்ளி பதக்கம்

விளையாட்டு

ருமேனியா நாட்டில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் தமிழக வீராங்கனையும் சலீம் ஸ்னூக்கர் பள்ளி மாணவியுமான அனுபமா ராமச்சந்திரன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி ருமேனியா நாட்டிலுள்ள புகாரெஸ்ட் நகரில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தமிழக வீராங்கனை அனுபமா இராமச்சந்திரன் இறுதிப்போட்டி வரை முன்னேறி அதில் தாய்லாந்து வீராங்கனை பஞ்சாயா சன்னோவை எதிர்கொண்டு அவரிடம் 1க்கு4 என்ற கேம்கள் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

முன்னதாக 16 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவில் 2017ம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற அனுபமா ராமச்சந்திரன், தமிழகத்திலிருந்து ஸ்னூக்கர் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனைக்கு சொந்தக்காரர். கடந்த சில ஆண்டுகளாக முன்னாள் சர்வதேச ஸ்னூக்கர் வீரரும், சலீம் ஸ்னூக்கர் பள்ளியின் நிறுவனருமான எஸ். ஏ. சலீமிடம் தீவிர பயற்சி மேற்கொண்டுவரும் இவர், ருமேனியாவில் நடைபெற்ற போட்டியில் 21 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கேற்றார்.

இதனைத்தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெறும் பெண்கள் 6 ரெட் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், நவம்பர் மாதம் துருக்கியில் நடைபெறும் பெண்கள் 15 ரெட் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்திய அணிக்காக பங்கேற்கிறார்.

பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் விளையாட்டில் பலமுறை மாநில சாம்பியன் பட்டம் வென்றுவரும் அனுபமா ராமச்சந்திரன், ஜூனியர் பிரிவில் 8 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர். 21 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் முதல்நிலை வீராங்கனையாக திகழும் அனுபமா ராமச்சந்திரன், சமீபத்தில் நடந்த தேசிய தேர்வு முகாமில் 119 பிரேக் சாதனை செய்து, இந்திய பெண்களில் இதுவரை யாரும் எட்டாத உயரத்தை எட்டியுள்ளார்.

ருமேனியா உலக சாம்பியன்ஷிப் ஸ்னூக்கர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய அனுபமா ராமச்சந்திரனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அனுபமா ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

ருமேனியாவில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இந்தப் போட்டி மிகவும் கடுமையானதாக இருந்தது.

அரை இறுதிப் போட்டியிலும், இறுதிப்போட்டியிலும் தாய்லாந்து வீராங்கனைகளுடன் மோத வேண்டி இருந்தது. அதில் அரையிறுதியில் வெற்றி பெற்ற நான் இறுதிப் போட்டியில் கடுமையாக போராடினேன். இருப்பினும் என்னைவிட தாய்லாந்து வீராங்கனை மிக அபாரமாக விளையாடினார். அவருக்கு தங்கப்பதக்கமும் எனக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.

அரை இறுதிப் போட்டியில் தோற்ற இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை கீர்த்தனா வெண்கல பதக்கம் வென்றார்.

ஆக, இந்திய அணிக்கு ஒரு வெள்ளி ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஸ்னூக்கர் விளையாட்டின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி வருகின்றன. இருப்பினும் அந்த உதவிகள் எங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, கூடுதலாக உதவிகள் செய்தால் என்னைப்போல் மேலும் பல வீராங்கனைகள் இந்த விளையாட்டில் இடம் பெற்று, இந்தியாவுக்கு பதக்கம் வென்று தருவார்கள்.

அதேபோல் ஸ்பான்ஸர்களின் உதவியும் இந்த ஸ்நூக்கர் விளையாட்டுக்கு பெரிதாக கிடைப்பதில்லை. எனவே, ஸ்பான்சர்களும் எங்களுக்கு உதவ முன் வர வேண்டும். தமிழக அரசும் ஸ்னூக்கர் விளையாட்டை பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்க முன்வர வேண்டும். இதன் மூலம் ஏராளமான பேர் இந்த விளையாட்டில் இடம் பெற்று, வெற்றிகள் பெற்று பெரிய ஸ்டார் ஆக வர முடியும்.

விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களை தமிழக அரசு பெரிய அளவில் ஊக்குவித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்து வருகிறது. இது எங்களைப் போன்ற வீரர், வீராங்கனைகள் விளையாட்டுத் துறையில் பங்கு பெற பெரிய ஊக்குவிப்பாக உள்ளது.

இவ்வாறு அனுபமா ராமச்சந்திரன் கூறினார். பேட்டியின் போது அவரது பயிற்சியாளரும், முன்னாள் சர்வதேச ஸ்னூக்கர் வீரருமான எஸ்.ஏ.சலீம் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *