சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் 35 வயது பிரிவில் ஆண்களில் பியூஷ் அகர்வாலும், பெண்களில் பாருல் ராவத்தும் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.
யோனக்ஸ் சன்ரைஸ் அகில இந்திய மாஸ்டர்ஸ் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.
டால்பின் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் அமைப்பு, தமிழ்நாடு மாநில பேட்மிண்டன் சங்கம் மற்றும் அகில இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் ஆதரவோடு இந்த போட்டிகளை நடத்தியது.
இதில் 35 வயது முதல் 75 வயது வரையிலான வயதுப்பிரிவுகளில் 1000க்கம் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இவர்களில் 35 வயதுக்குட்ட ஆண்கள் ஒற்றையர் போட்டியில் 3வது நிலை வீ¦ரராக வரிசைப்படுத்தப்பட்ட பியூஷ் அகர்வால் 21க்கு12, 14க்கு 21, 21க்கு7 என்ற புள்ளிகளில் மகாராஷ்டிரா வீரர் ஆதித்யா பாண்டியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
35 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் போட்டியில் கேரள வீராங்கனை பாருல் ராவத் 21க்கு9, 21க்கு7 என்ற புள்ளிகளில் டெல்லி வீராங்கனை மான்சி கோலியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
35 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் கடுமையான போட்டி நிலவியது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரேஹன் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஜாம்ஷித் ஜோடி 21க்கு18, 23-க்கு25, 21க்கு15 என்ற புள்ளிகளில் தமிழகத்தைச் சேர்ந்த என்.கோபிநாத் மற்றும் எஸ்.சுப்பிரமணியம் ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டிகளின் முடிவில் இந்திய பேட்மிண்டன் சங்க துணைதலைவரும், தமிழக பேட்மிண்டன் சங்க தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார். ஜேப்பியார் பல்கலைக்கழக வேந்தர் ரெஜினா ஜெ.முரளி, தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க செயலாளர் வீ.அருணாசலம் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.