திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவி தான் தற்போது தமிழக அரசியலில் பிக் டாக்!

கேலரி செய்திகள்

முன்பு திமுக துணைப் பொதுச்செயலாளராகவிருந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் அவர்களின் மறைவிற்குப் பிறகு, துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பைக் கனிமொழிக்குக் கொடுக்கப்போவதாக எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், அப்போது சுப்புலட்சுமி ஜகதீசனுக்கு அப்பதவிக் கொடுக்கப்பட்டது. தற்போது அவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் அந்த இடத்திற்கு அடுத்து யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்திருக்கிறது.

திமுகவின் தலைமை கழகப் பொறுப்புகளில் முக்கியமான ஒன்று துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு. ஐந்து துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்பது திமுகவின் கட்சிவிதி என்பதால், அப்பதவிக்கு எல்லோரிடமும் அதிக எதிர்பார்ப்பு உண்டு.

நடக்கவிருக்கும் தேர்வு குறித்து திமுகவின் மகளிரணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “தமிழ்நாட்டு அரசியல் சூழலில் எப்போதும் பெண்கள் தங்களுக்கான இடத்தை பிடிப்பதற்குக் கடுமையாகப் போராடிட வேண்டும். அதுவும் ஒரு பெண் தலைமை பொறுப்புக்கு வருவது அவ்வளவு எளிதானதல்ல. அப்படி இருக்கையில், தன்னை கடுமையான கட்சிப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மகளிரணி செயலாளர் கனிமொழிக்குத் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புக் கொடுத்தால் சரியானதாக இருக்கும்.” என்று அந்த மகளிரணி நிர்வாகித் தெரிவித்தார்.

திமுகவின் முக்கியப் பொறுப்புகளிலிருந்தவரும், கட்சியில் இப்போது தொடர்ந்து செயல்பட்டு வருபவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடமும் பேசினோம். ”தலைவர் கலைஞர் இருந்த வரை கழகத்தை அரண்போல காத்து நின்றார். அந்த வரிசையில் வரும் ஒருவரான கனிமொழிக்குத் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு கொடுக்கலாம். அவரது பல செயல்பாடுகள் முக்கியமானதாகத் தோன்றுகிறது.”என்று கூறினார்.

அதேபோல், அண்ணா அறிவாலயத்தின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “பெரியாரின் ஆற்றல்மிக்க கொள்கைகளின் மீதும், அண்ணாவின் உரிமை சார் போராட்டங்களின் மீதும், கலைஞரின் அறிவார்ந்த செயல்பாடுகள் மீதும் நம்பிக்கை கொண்டு செயல்படுபவர்கள் தற்போது அதிகம் தேவைப்படுகிறார்கள். அந்த விதத்தில் இன்று கனிமொழி முக்கியமானவர். கடைசியாக நடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கழகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.அவர் அப்பொறுப்பிற்கு வந்தால் நன்றாகவிருக்கும்.” என அந்த நிர்வாகி சொல்கிறார்.

“பல ஆண்டுகள் கட்சியின் சாதாரணத் தொண்டரைப் போல உழைத்து, கொள்கை ரீதியாகவும் களப்பணிகள் மூலம் தன் முக்கியத்துவத்தை உறுதி செய்தவர் கனிமொழி. இப்படியான ஒரு பெண் தலைமை கிடைப்பது அரிது. அவர்தான் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்குச் சரியான ஆளாக இருப்பார். இன்னும் சொல்லப்போனால் அவரே கலைஞரின் ஒரே அறிவுசார் வாரிசு.” என்று மூத்த பெண் நிர்வாகி ஒருவர் கூறுகிறார்.

தமிழ்நாட்டு அரசியலைத் தொடருந்து கவனித்துவரும் அரசியல் விமர்சகர் ஒருவரிடம் இந்தத் துணைப் பொதுச் செயலாளர் தேர்வு குறித்து பேசுகையில், “நம் மாநிலத்தின் அரசியலில் எப்போதும் ஆண்களே ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு பெண் தலைமை உருவாவது கடினம் என எண்ணி வந்தேன். தற்போது கனிமொழியைப் பார்க்கையில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. இப்போது துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், திமுகவிற்கு வலிமை சேர்க்கும் என்று தோன்றுகிறது.” என்றுதெரிவித்தார்.

இப்படியாகக் கட்சியினர் மற்றும் அரசியல் ஆர்வலர்களின் கருத்துகள் இருக்கிறது. இம்முறை துணைப் பொதுச்செயலாளராகக் கனிமொழி தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அது திமுகவின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி பல வழிகளில் நன்மைத் தரக்கூடியதாகவிருக்கும் என்று கட்சியினர் விருப்பம் தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *