தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய இருவர் 15 நாட்களுக்குள் காவல்துறையிடம் சரணடையாவிட்டால் அவர்களுடைய ஆணுறுப்பை அறுத்துவிடுவேன் என்று அரிவாளுடன் மிரட்டல் விடுத்துள்ளார் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி.
சென்னை ராமாபுரம் பகுதியில் வசிக்கும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேகதாது அணையை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனையில் இருந்தபோது வீரலெட்சுமியின் மொபைல் போனுக்கு ஆபாசமாக வீடியோ கால் செய்ததாக கூறுகிறார்.
இதே போன்று இதற்கு முன்னரும் நடந்துள்ளதாகவும் அது குறித்து காவல்துறையில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள வீரலட்சுமி தற்போது ஆபாச வீடியோ அனுப்பிய நபர்களை எச்சரித்து கையில் அரிவாளுடன் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஆபாச வீடியோ அனுப்பிய நபர்கள் 15 நாட்களுக்குள் காவல்துறையிடம் சரணடையவில்லை என்றால் அரபு நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படுவதாக கூறப்படும் அந்த மாதிரியான தண்டனையை தானே கொடுப்பேன் என்று எச்சரித்துள்ளார்.
தனது இந்த செயலுக்காக தமிழக அரசின் வீரதீர செயலுக்கான விருதினை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதோடு,அரசியல் பலம், படை பலம், பண பலம் வைத்துள்ளதால் தனக்கான நீதியை நீதிமன்றத்தில் பணம் செலவு செய்து பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் சாதாரண தமிழ் பெண்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்