‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, தற்போது ‘அழகிய கண்ணே’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் பிரபு சாலமன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இயக்குநர் சீனு ராமசாமியின் சகோதரரும், அவருடன் பல படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவருமான ஆர்.விஜயகுமார் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெளரவ வேடம் ஒன்றில் நடித்துள்ளார். சமீபத்தில் படமாக்கப்பட்ட அந்த காட்சிகளுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதுகிறார். ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத்தமிழன் படத்தொகுப்பு செய்கிறார்.