நீட் தேர்வால் மாணவிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் சோக சம்பவங்கள் நிகழ்ந்து வந்த நிலையில், மும்பையில் நீட் தேர்வால் மகள் பெற்ற தாயை கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
நவிமும்பை பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உண்டு. மகளை மருத்துவம் படிக்க வைக்க விரும்பு தம்பதி, அதற்காக அவரை நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணுக்கு மருத்துவம் படிப்பதில் விருப்பம் இல்லையாம். இதை அவர் பெற்றோரிடமும் கூறி வந்துள்ளார்.
இதற்கிடையே, அப்பெண்ணை அவ்வபோது நீட் தேர்வுக்கு படிக்கும்படி தந்தையும், தாயும் வற்புறுத்திய நிலையில், ஒரு நாள் தனது தாய் செல்போனில் இருந்து தனது தந்தைக்கு ‘விடை பெறுகிறேன்’ என்ற குறுந்தகவல் சென்றுள்ளது. மேலும், அந்த பெண் தனது தந்தையை தொடர்புக் கொண்டு, “அம்மா அறை கதைவை மூடிக்கொண்டு திறக்கவில்லை” என்றும் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்த வீட்டு கதவை உடைத்து பார்த்த போது, அந்த பெண் பிணமாக கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடைலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், அப்பெண்ணின் தலையில் காயம் இருப்பதாகவும், அவர் கழுத்து நெறிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்தது.
இந்த நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் அப்பெண்ணை அவருடைய 15 வயது மகள் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து அந்த பெண் போலீசாரிடம் கூறுகையில், “சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்தபோது, எனது படிப்பு தொடர்பாக தாயுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது தாய் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து என்னை மிரட்டினார். என்னை கொல்ல வருவதாக பயந்தேன். உடனே தாயை தள்ளி விட்டேன். அவர் கீழே விழுந்தபோது கட்டிலில் அவரது தலை பட்டு காயம் அடைந்தார். அரை மயக்கத்தில் கிடந்த தாயை கராத்தே பெல்டை எடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் எனது தாயின் போனில் இருந்து தந்தைக்கு வாட்ஸ்அப் தகவல் அனுப்பி விட்டு, கதவை பூட்டி விட்டு வெளியே சென்று தந்தைக்கு போன் செய்து தாய் கதவை திறக்க மறுப்பதாக பொய் கூறினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளானதால் தான் அந்த பெண் இந்த கொலையை செய்ததாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதோடு, இந்த சம்பவம் பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.