கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ‘மாஸ்டர்’ புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி காரைக்குடியில் தொடங்க உள்ளது.
இதில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால், கொரோனா மூன்றாவது அலை அச்சத்தில் இருக்கும் மாவட்ட நிர்வாகம், கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் பங்கேற்கும் படப்பிடிப்பு என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக கூடி விடும், எனவே படப்பிடிப்புக்கு அனுமதியளிக்க முடியாது, என்று கூறிவிட்டதாம்.
இந்த நிலையில், தனது படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டத்தை காரணமாக வைத்து, தனது மக்கள் நீதி மய்யம் கட்சியினரை கூட்டி ஒரு கண்டன ஆர்பாட்டத்தை நடத்தலாமா, என்று கமல்ஹாசன் தனது சகாக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.