பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

விளையாட்டு

பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. விக்கெட்கள் சரிந்தாலும் தொடர்ந்து ரன்களை குவித்து வந்த பாகிஸ்தான், 124 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியதும் பாபர் அசாம் 58 ரன்னில் அவுட்டானார். ஹசன் அலி 28 ரன்னில் வெளியேறினார். இறுதியில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தினறியது. பிறகு பொறுமையுடன் ஆட தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்து நிதானமாக ஆடினார்கள்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *