இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. 1970 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டிகளை மையப்படுத்திய இப்படத்தில் படமாக்கப்பட்ட குத்துச்சண்டை காட்சிகள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களாக நடித்த நடிகர்களுக்கும் பெரும் பாராட்டு கிடைத்தது.
இதற்கிடையே, ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் திமுக- குறித்து உயர்வாக பேசுவது போன்றும், அதிமுக குறித்தும் அதன் நிறுவனர் எம்.ஜி.ஆர் பற்றியும் சில தவறான கருத்துக்களை தெரிவித்திருப்பதாகவும், அதிமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
இந்த நிலையில், அதிமுக சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான காட்சிகளைக் கொண்டு மக்களிடம் பொய்ச் செய்தியை இயக்குநர் பா.இரஞ்சித் பரப்பியதாகவும், அந்தக் காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உண்மையை ஒப்புக்கொள்ளா விட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது, என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக-வின் இந்த நோட்டீஸ் இயக்குநர் பா.இரஞ்சித்தை எச்சரிக்கும் வகையில் உள்ளதால், அவருக்கு அதிமுக-வால் ஆபத்து ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்.பி இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.