இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன் பின் முதல் இன்னிங்சை விளையாடி இங்கிலாந்து அணி 391 ரன்களுகு ஆல் அவுட் ஆனது.
27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, போட்டியின் கடைசி நாளில், 298 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர், இந்திய பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சால் ஆரம்பத்திலேயே திணற ஆரம்பித்தார்கள்.
குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஹமீது 9 ரன்கள், பேர்ஸ்டோ 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ஜோ ரூட் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஜோஸ் பட்லர் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 25 ரன்களில் அவுட்டானார். இதனால் இங்கிலாந்து அணி 120 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட், பும்ரா 3 விக்கெட், இஷாந்த் 2 விக்கெட், ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.