நடிகர் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’. செப்டம்பர் 10 தேதியன்று ஜீ 5யில் வெளியாகிறது அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்குகிறார்

சினிமா

2020 ஆம் ஆண்டில் ஜீ 5 ‘லாக்கப்’, ‘க/ பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் கே எஸ் ரவிக்குமார் நடித்த ‘மதில்’ படத்தை வழங்கி, ரசிகர்களை மகிழ்விக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மேலும் சுவராசியமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வரிசையில் ஜீ 5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘டிக்கிலோனா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த டைம் டிராவல் ஃபேண்டசி டிராமா படத்தில் முன்னணி நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘டிக்கிலோனா’ படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், முனிஸ்காந்த், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரவிந்த் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஜோமின் மேத்யூ படத்தை தொகுத்துள்ளார். பாடலாசிரியர்கள் அருண்ராஜா காமராஜ் மற்றும் கு. கார்த்திக் எழுதிய பாடல்களுக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைத்திருக்கிறார். ‘கோமாளி’ பட புகழ் கலை இயக்குனர் ராஜேஷ் கலை இயக்கத்தை கவனிக்க, தினேஷ் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,’ சயின்ஸ் ஃபிக்ஷன் டைம் ட்ராவல் ஜானரில் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. கதையின் நாயகனான சந்தானம் டைம் ட்ராவலில் பயணித்து தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பதுதான் சுவராசியமான கதை’ என்றார்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி 15 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. சந்தானம் நடித்திருக்கும் டிக்கிலோனா படத்தின் முன்னோட்டம் தான் அவர் நடித்த திரைப்படங்களில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும்..’ என தொடங்கும் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு, இணையத்தில் வெளியானது. அந்தப் பாடல் இதுவரை 6 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையை படைத்திருக்கிறது.

அத்துடன் இந்தப்படத்தில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இது போன்ற பல அம்சங்கள் ‘டிக்கிலோனா’ படத்தில் அமையப் பெற்றிருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஜீ 5, தன்னுடைய ஒரிஜினல் பட வரிசையில் ‘டிக்கிலோனா’ திரைப்படத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 தேதி, விநாயகர் சதுர்த்தி திருவிழா தினத்தன்று வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *