மீண்டும் தளர்வுகளற்ற ஊரடங்கா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

செய்திகள்

கொரொனா இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்ததோடு, பாதிப்பும் நாளுக்கு நாள் குறைந்தது.

இதற்கிடையே, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான இடைப்பட்ட நாட்களில் இந்தியாவில் மூன்றாவது அலை வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் உள்ள தளர்வுகளுடன் கூட ஊரடங்கு வரும் 23 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தமிழகத்தின் மொத்த சதவீதத்தை காட்டிலும் அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதே சமயம், அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடித்தால் மூன்றாவது அலை தமிழகத்தில் நுழையாமல் தடுக்கலாம், என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்கங்கள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், மூன்றாவது அலையில் இருந்து தப்பிப்பதற்காக அக்டோபர் மாதம் இறுதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *