பள்ளிகள் திறக்கும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது

செய்திகள் மாநிலம்

தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு தற்போது 1,700-க்கு கீழ் குறைந்துள்ளது. நேற்று 1,668 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

இதையடுத்து ஊரடங்கை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பு செய்வது? திங்கட்கிழமை முதல் என்னென்ன கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை வருகிற 1 ஆம் தேதி திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அப்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பள்ளிகளை திறந்தால் என்னென்ன முன்ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்தும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

பள்ளிகளை திறக்கும் போது மாணவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க என்னென்ன முன்ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது பற்றி பள்ளிக்கூடங்களுக்கு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அறிவிப்பாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வருகிற 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுமா என்பது இன்று மாலை தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *