’பூமிகா’ திரைப்பட விமர்சனம்

சினிமா செய்திகள்

உலக நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை பேசும் பேய் படமாக உருவாகியுள்ளது ‘பூமிகா’.

நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், அவருடைய கணவர், குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் என ஐந்து பேர் ஊட்டியில் உள்ள பழைய கட்டிடம் ஒன்றை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிக்காக செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு அமானுஷ்ய சக்தி ஒன்று தொல்லை கொடுக்க, அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா, அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் கதை.

பேய் படங்களுக்கு உரித்தான பிளாஷ்பேக் உள்ளிட்ட வழக்கமான பாணியை இயக்குநர் கையாண்டிருந்தாலும், அதை சமூக பிரச்சனை என்ற கதைக்களத்தோடு சேர்த்து சொல்லியிருப்பதால், மற்ற பேய் படங்களில் இருந்து வித்தியாசப்படுவதோடு, ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.

சிறு சிறு எக்ஸ்பிரஷன்கள் மூலம் ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நாயகி என்பதையும் தாண்டி, ஒரு கதாப்பாத்திரமாக கதையுடன் பயணித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்திருக்கும் விது, அவருடைய தோழியாக நடித்திருக்கும் சூர்யா கணபதி, சகோதரியாக நடித்திருக்கும் மாதுரி ஆகியோர் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

மலைவாழ் மக்களின் பிரதிநிதியாக நடித்திருக்கும் பாவல் நவகீதனின் வசன உச்சரிப்பும், நடிப்பும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை பிரபதிலிக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷையும் கடந்து, பூமிகா வேடத்தில் நடித்திருக்கும் அவந்திகா ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிகிறார். வசனமே பேசவில்லை என்றாலும், இயக்குநர் சொல்ல நினைத்ததை ரசிகர்களிடம் மிக அழுத்தமாக கொண்டு சேர்க்கிறது அவந்திகாவின் நடிப்பு.

ராபர்டோ ஜஸாராவின் ஒளிப்பதிவும், பிருத்வி சந்திரசேகரின் இசையும் கதாப்பாத்திரங்களாக பயணித்துள்ளன.

முதல் காட்சியிலேயே நம்மை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர், ஊட்டியில் நடக்கும் அடுத்தடுத்த திகில் சம்பவங்கள் மூலம் படம் முழுவதும் சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார். திகில் காட்சிகள் மூலம் படம் பார்ப்பவர்களை பயமுறுத்த செய்வதோடு, இயற்கை விடும் எச்சரிக்கையை நமக்கு நினைவு கூறவும் செய்கிறார்.

திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் சில குறைகள் இருந்தாலும், படத்தின் கதைக்களமும், அதை ஒரு படமாக சொல்லிய விதத்தாலும் இயக்குநர் ரத்திந்திரன் ஆர்.பிரசாத்தையும், ‘பூமிகா’ வையும் நன்றாகவே பாராட்டலாம்.

ரேட்டிங் 3.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *