சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை! – அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

செய்திகள் மாநிலம்

தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நெடுஞ்சாலைகள் துறையின் மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திருவையாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், சுங்கச்சாவடிகளை ஒவ்வொரு முறை கடக்கும்போது நீண்ட நேரம் ஆகிறது.

பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் என்பதை போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளையும் அகற்றி பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

அவருக்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “சுங்கசாவடிகளை கடப்பதற்கு அமைச்சராகிய எனக்கே பல நிமிடங்கள் ஆகிறது. தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

சென்னையைச் சுற்றி நீண்ட காலமாக நகர்ப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய சென்ன சமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, பரனூர் ஆகிய ஐந்து சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.

கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதலமைச்சரின் உத்தரவின்படி டெல்லிக்கு நேரில் சென்று மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *