மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி! – 3 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு

செய்திகள் மாநிலம்

மதுரையில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7.5 கிமீ தூரத்திற்கு கட்டப்பட்டு வரும் தமிழகத்தின் நீளமான பறக்கும் பாலத்தில், நாராயணபுரம் அருகே ஒரு பகுதி பால கான்கிரீட் கர்டர் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது. இதில் உ.பியை சேர்ந்த ஒரு தொழிலாளி பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார்.

புதிதாக கட்டப்பட்டு வரும் இப்பாலத்தின் தூண்கள் பொருத்தும் பணி, ஹைட்ராலிக் இயந்திரம் பொருத்திய ராட்சத கிரேன் மூலம் நடந்தது. அப்போது ஹைட்ராலிக் இயந்திரம் உடைந்ததில், பால கான்கிரீட் கர்டர் பயங்கர சத்தத்துடன் சரிந்து கீழே விழுந்து நொறுங்கியது. கீழே ஏராளமான இரும்பு தாங்கு தூண்களை நிறுத்தி வைத்திருந்தனர்.அந்த தூண்கள் அனைத்துமே சரிந்தன. பாலத்தின் கீழ் நின்றிருந்தவர்களில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி ஆகாஷ் சிங்(26) இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி நசுங்கி பலியானார். மேலும், பாலத்தின் மேலே நின்றிருந்தவரும் மேலிருந்து விழுந்து காயமடைந்தார்.
தகவலறிந்து தீயணைப்பு மீட்பு குழுவினர், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர். அதிர்ஷ்டவசமாக இவர்கள் உயிர் தப்பினர். தமிழகத்தின் மிக நீளமான இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது, மதுரையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாலம் இடிந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொறியாளர்கள், பணியாளர்களிடம் விசாரித்தார்.

மேலும், விபத்து தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேம்பால பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *