சீமான் பாஜகவின் B Team என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்- ஜோதிமணி

செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது.பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு.சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.இவர் இப்படிப் பொறுப்பில்லாமல் ,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில்,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாககுகிறார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.பாஜகவிடமிருந்து மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆபாசமான,அறுவெறுக்கத்தக்க,ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் திரு.சீமான் போன்றவர்களிடமும் பெண்களும்,தமிழ்சமூகமும் விழிப்புடன் இருக்கவேண்டும்.இவர்கள் எல்லாம் பெண்களின் பாதுகாப்பு,மரியாதை,கண்ணியம் பற்றி துளிகூட கவலைப்படாதவர்கள்,பெண்களை பாலியல்ரீதியான வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை ஆதரிப்பவர்கள்.காலம் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றங்கள்,ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்காக அவையெல்லாம் சரியென்று ஆகிவிடுமா? பாலியல் குற்றவாளிகள் எல்லாம் நிரபராதிகள் ஆகிவிடுவார்களா?எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடக்கின்றனவோ அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டுதானிருக்கிறன என்பதை திரு.சீமான் நினைவில் கொள்ளவேண்டும்.அந்த போராட்டங்களின் பயனாகவே இன்று பெண்கள் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது வெற்றிகரமான பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள். பல்வேறு உளவியல், சமூக,பொருளாத தடைகளைத்தாண்டி பொதுவாழ்விற்கு வரும் பெண்கள் கண்ணியத்துடனும்,மரியாதையுடனும்,பாதுகாப்புடனும் நடத்தப்படவேண்டும்.அப்படியில்லாமல் பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்பவர்கள் கண்டிக்கப்படவேண்டும்,தண்டிக்கப்படவேண்டும். இதுதான் ஒரு நாகரிகமான சமூகத்தின் கடமை. அந்த கடமையைத் தான் தமிழ்சமூகம் சரிவர செய்துவருகிறது.பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் அயோக்கியர்களையும்,அவர்களை அப்பட்டமாக ஆதரிப்பவர்களையும் தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
இதுதான் சீமான் போன்றவர்களுக்கு உறுத்துகிறது.திரு.சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.மேலும் சீமான் பாஜகவின் B Team தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். எப்படியிருந்தாலும் திரு.சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது.சீமான்,ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.தமிழகம் குறிப்பாக நமது எதிர்காலமான இளைஞர்களும்,மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தை புரிந்து கொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *